ரமலான் பண்டிகையும் அதன் மகத்துவமும்

ரமலான் பண்டிகையும் அதன் மகத்துவமும்

   

இஸ்லாமிய நாட்காட்டி (Islamic calendar) அல்லது முஸ்லிம் நாட்காட்டியில் (Muslim calendar) ரம்ஜான் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள்.  இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபி முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்

இஸ்லாமியத்தின் ஐந்து தூண்கள் என்பது இஸ்லாமிய மார்க்கக் கடமைகள் ஐந்தைக் குறிக்கும். அவை
கலிமா,தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்பன ஆகும்.

கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல் 
ஹஜ் -- புனித பயணம் மேற்கொள்ளல்

ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாமியத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ் தொகுப்பின் படியும் பின்பற்றப்படுகிறது. முகமது நபி அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி தான் ஹதீஸ் ஆகும். ஹதீஸ் தொகுப்பில் உள்ள  பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படி 29–30 நாட்கள் நோன்பு இருக்கலாம்.

நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள். மக்காவில் இருந்து மதீனாவிற்கு இஸ்லாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு இருக்க வேண்டும் என்பது கட்டாயமான கட்டுப்பாடாக  இருந்தது. 


மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின் முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல்( இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு ) மஸ்ஜிதுன் நபவி மதீனா நகரில் அமைந்துள்ளது. 

நள்ளிரவு சூரியன் அல்லது துருவ இரவு போன்ற இயற்கை நிகழ்வுடன் வாழும் முஸ்லிம்கள் மக்காவின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாமியத்தில் ஓர் சட்ட பரிந்துரையான " ஃபத்வா " அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்னவென்றால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் பகலிலிருந்து இரவை வேறுபடுத்த இயலக்கூடிய நாளிலிருந்து தமக்கு நெருங்கிய நாட்டின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, இஸ்லாமியர்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். தவறான பேச்சு (அவமதிப்பு, புறம்பேசுதல், சபித்தல், பொய் போன்றவை) மற்றும் சுய-பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லாமல் பிறருடன் சண்டையிடுவது போன்ற பாவ காரியங்களில் ஈடுபட்டால் அவை நோன்பின் பலனைக் குறைத்து விடுமென்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்கள் நடத்தையை தவிர்த்து விடுகிறார்கள்.

நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது " ஸஹர் " எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது " இப்தார் " எனவும் குறிப்பிடப்படுகிறது.

நோன்பினால் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
1.தன்னடக்கம்
2.நாவடக்கம்
3.உணவுக் கட்டுப்பாடு
4.கோபத்தை அடக்குதல்
5.சமூக நலம் பேணுதல்

 

Related Posts